ஐசிசி புதிய தலைவர் ஆலன் ஐசக்

Home  >> Entertainment  >> cricket News  >> ஐசிசி புதிய தலைவர் ஆலன் ஐசக்

   (2012-06-28 00:00:00)

கோலாலம்பூர்: சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருந்த சரத் பவாரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஐசிசி புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த ஆலன் ஐசக் பதவியேற்றுள்ளார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஐசிசி வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐசிசி தலைவர் சரத் பவாரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஐசிசி தலைவராக பதவி வகித்த சரத் பவாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அவருக்கு பதிலாக ஐசிசி துணை தலைவராக பதவி வகித்து வந்த நியூசிலாந்தை சேர்ந்த ஆலன் ஐசக்கிடம் பவார் தனது பதவியை ஒப்படைத்தார். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆலன் ஐசக், வரும் 2014ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். முன்னாள் நியூஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி வகித்துள்ள ஆலன் ஐசக் ஐசிசி தலைவர் பதவியை வகிக்கும் 8வது நபர் ஆவார்.

ஐசிசி தலைவர் பதவியை வகிக்கும் கடைசி தலைவரும் ஆலன் ஐசக் தான். அவரது பதவி காலத்திற்கு பிறகு ஐசிசி தலைவர் என்பதற்கு பதிலாக சேர்மன் பதவி உருவாக்கப்பட உள்ளது. அதேபோல முன்னாள் தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் டேவிட் ரிச்சார்ட்சன் ஐசிசியின் தலைமை நிர்வாகி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆலன் ஐசக் கூறியதாவது,

எனக்கு முன் ஐசிசி தலைவர் பதவி வகித்தவர்களை நான் பார்த்துள்ளேன். எனவே நான் இன்று வகிக்கும் பதவியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டிய முக்கிய பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பதவியை வகிக்க நான் பெருமைப்படுகிறேன்.

எனக்கு முன் இந்த பதவியை வகித்தவர்களை போலவே பல சவால்களை நானும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் நம்பகத் தன்மையை பாதுகாக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட்டின் அடிப்படையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் நேர்மையும் ஒற்றுமையும் நிலைத்திட நான் பாடுபடுவேன் என்றார்.