இந்தியா அபார பந்துவீச்சு-இலங்கை 3 விக்கெட்களை இழந்து ரன் சேர்க்க திணறல்

Home  >> Entertainment  >> cricket News  >> இந்தியா அபார பந்துவீச்சு-இலங்கை 3 விக்கெட்களை இழந்து ரன் சேர்க்க திணறல்

   (2012-07-28 00:00:00)

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 12 ஓவர்களில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து ரன் சேர்க்க திணறி வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய தில்ஷன் 4 ரன்களில் ஜாகிர்கான் பந்தில் போல்டானார். மற்றொரு துவக்க வீரர் தரங்கா 8 ரன்கள் மட்டுமே எடுத்து டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சந்திமால் டக் அவுட்டானார்.

12 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது. சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஜோடி களத்தில் ஆடி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 1-1 என்ற சம புள்ளிகளுடன் இன்று 3வது போட்டியில் இரு அணிகளும் களமிறங்க உள்ளது.

இந்திய அணி:

சுழல்பந்துவீச்சாளர் ஓஜா பயிற்சியின் போது கழுத்தில் காயமடைந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக மனோஜ் திவாரி அல்லது ராகுல் சர்மா அணியில் வாய்ப்பு பெறலாம் என்று தெரிகிறது.

பேட்டிங்கை பொறுத்த வரை இந்திய அணிக்கு விராத் கோஹ்லி, கெளதம் கம்பிர், சுரேஷ் ரெய்னா, டோணி, ஷேவாக் என்று நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜொலித்த மேற்கண்ட பேட்ஸ்மேன்களில் கம்பிரை தவிர, மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

2வது போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு பெறும் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஏமாற்றி வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை ஜாகிர்கான், இர்பான் பதான், அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். பகுதி நேர பந்துவீச்சில் ஷேவாக், ரெய்னா ஆகியோர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.

இலங்கை அணி:

இலங்கை அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. தரங்கா, சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோர் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். பந்துவீச்சில் பெரேரா, ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கின்றனர்.

தொடரின் 2வது ஒருநாள் போட்டியில் 138 ரன்களில் இந்தியாவை ஆட்டமிழக்க வைத்துள்ளதால், இன்றைய போட்டியிலும் இலங்கை பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற தெரிகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்ற பெற கடுமையாக முயற்சி செய்யும் என்பதால், போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.