மோடியை பார்க்க ஆன் லைன் பதிவு இன்று தொடக்கம்

குஜராத் முதல் மந்திரியும், பா.ஜனதா பிரச்சார குழு தலைவருமான நரேந்திரமோடி 26ந்தேதி தமிழகம் வருகிறார். திருச்சியில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்காக திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் மாநாட்டு திடல் அமைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்களை திரட்டும் பணிகள் நடந்து வருகிறது.

மாநாட்டுக்கு வருபவர்கள் முன்கூட்டியே பெயர் பதிவு செய்ய வேண்டும். நுழைவு கட்டணமாக ரூ. 10 செலுத்த வேண்டும். இதற்காக மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் மூலம் பெயர் பதிவு நடந்து வருகிறது.

இந்த படிவங்களில் பெயர், கல்வி தகுதி, வயது, பா.ஜனதா உறுப்பினரா? உறுப்பினராக இல்லாவிட்டால் கட்சியில் சேர விருப்பமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஆன் லைன் மூலமும் பெயர் பதிவு செய்து கொள்ளும் வசதியை பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப குழு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தனி வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா இன்று மாலையில் கமலாலயத்தில் நடக்கிறது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பல்துறை வல்லுனர்கள், மாணவர்கள் பெயர்களை பதிவு செய்து தொடங்கி வைக்கிறார்கள்.

ஆன் லைனில் பெயர் பதிவு செய்பவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வசதியாக மாநாட்டு திடலில் 200 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் உள்பட மாநாட்டுக்கு 3 முதல் 4 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.

Copyright © 2012. www.haihoi.com