குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் கொள்ளை

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் கொள்ளை

   (2012-07-16 00:00:00)

சிவகங்கை: தேவகோட்டையில் தொழில் அதிபர் வீட்டுக் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 225 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் தங்கம் சீனிவாசன். அவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராகவும் உள்ளார். அவரது வீட்டுக்கு அருகேயே அரிசி ஆலை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு 1 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை யாரோ உடைக்கும் சத்தகம் கேட்டு எழுந்த சரோஜா முகமூடி கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரைப் பார்த்த கொள்ளையர்கள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாதே என்று மிரட்டினர். அதற்குள் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து கீழே வந்தனர். அவர்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் வீட்டில் உள்ள நகை, பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர்.

நகை, பணமெல்லாம் ஆலையில் உள்ளது என்று அவர்கள் கூறியவுடன் கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவில் கழுத்தில் கத்தியை வைத்தனர். மேலும் நகை, பணம் இருக்கும் இடத்தை கூறாவிட்டால் வீட்டில் இருக்கும் பெண்களில் ஒருவரை பலாத்காரம் செய்துவிடுவோம் என்று மிரட்டனர். இதற்கு பயந்து நகை, பணம் பீரோவில் தான் உள்ளது என்பதை அவர்கள் கொள்ளையர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் வீட்டு மாடியில் உள்ள பீரோவில் இருந்த ரூ.55 லட்சம் மதிப்புள்ள 225 பவுன் தங்க நகைகள், ரூ.5,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர். அப்போது சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோரின் தாலிச் சங்கிலிகளையும் பறித்துக் கொண்டு சென்றனர். அப்போது ராஜலட்சுமி தனது தாலியை மட்டுமாவது கொடுக்குமாறு கொள்ளையர்களின் காலைப் பிடித்து கெஞ்சினார். இதையடுத்து அவரது தாலியை மட்டும் கொடுத்துவிட்டு சென்றனர்.

கொள்ளையர்கள் அந்த வீட்டில் சுமார் ஒரு மணிநேரமாக இருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தங்கம் சீனிவாசன் ஊரில் இல்லாத நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் யாரோ உள்ளூர்வாசிகள் தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.