உயர்ந்த லட்சியங்களை கொண்டு சிறந்த சாதனை படைக்க வேண்டும்-அப்துல்கலாம் அறிவுரை

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> உயர்ந்த லட்சியங்களை கொண்டு சிறந்த சாதனை படைக்க வேண்டும்-அப்துல்கலாம் அறிவுரை

   (2012-07-09 00:00:00)

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் உள்ள விஜயலட்சுமி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது அப்துல்கலாம் பேசியதாவது:-

இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் இலவச கல்வியை வழங்கி வரும் விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் ஆறுமுகசாமியின் பணி மகத்தானது. இந்த அறக்கட்டளை மேலும் வளர்ந்து பல்கலைக் கழகமாக உருவாகி எண்ணற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளிப்பருவம் முதலே உயர்ந்த லட்சியங்களை தேர்ந்தெடுத்து விடா முயற்சியுடன் கடுமையாக உழைத்தால் நிச்சயம் அவற்றை அடையத்தேவையான அறிவையும், துணிவையும் பெறமுடியும்.

லட்சியங்களை அடையவும், சாதனைகளை படைக்கவும் கல்வி மிகவும் அவசியம். ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வியானது அவரது சந்ததியினர் அனைவரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். புகழ் பெற்ற விஞ்ஞானிகளான தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் பிரதர்ஸ், கிரகாம் பெல், சர்.சி.வி. ராமன், மேடம் கியூரி போன்றவர்களை அவர்களது கண்டு பிடிப்புகளுக்காக உலகம் இன்னும் நினைவு கொள்கிறது.

ஆகவே நமது மாணவர்களும் அவர்களை போல உயர்ந்த லட்சியங்களை கொண்டு சிறந்த சாதனை படைக்க வேண்டும். 60 கோடி இளைஞர்களைக் கொண்ட இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய சக்தியாக விரைவில் உருவாகும். மாணவர்கள் எதிர்கால இயற்கை வளத்தைக் காப்பாற்ற மரம் வளர்ப்பதையும், சிறந்த தேசத்தை உருவாக்க தாய்-தந்தையரை பேணிக் காப்பதையும் ஒரு கடமையாக கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அப்துல் கலாம் பேசினார்.