டிஎன்பிஎஸ்சி எந்த தேர்வானாலும் 40 நாளில் ரிசல்ட் வெளியீடு-நட்ராஜ் அறிவிப்பு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> டிஎன்பிஎஸ்சி எந்த தேர்வானாலும் 40 நாளில் ரிசல்ட் வெளியீடு-நட்ராஜ் அறிவிப்பு

   (2012-06-23 00:00:00)

கோவை :டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய 40 நாட்களில் தேர்வு முடிவு வெளியிடப்படும். அடுத்த 15 நாட்களில் பணி வழங்கப்படும், என அதன் தலைவர் ஆர். நட்ராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 மற்றும் குரூப் 8ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வுக்கான பாதுகாப்பு முறைகள் குறித்து அதன் தலைவர் ஆர்.நட்ராஜ் நேற்று கோவையில் 8 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நட்ராஜ் கூறியதாவது: குரூப் 4 பணியிட தேர்வு எழுத வருபவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுதக் கூடாது என்பதற்காக மாநிலம் முழுவதும் 244 இடங்களில் 5 ஆயிரம் மையங்களில் தேர்வு நடக்கிறது. 10,793 பணியிடங்களுக்காக 12.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிக விண்ணப்பங்கள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வரப்பெற்றுள்ளன. 1013 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வசதியாக தரை தளங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

முதன்மை தேர்வு அதிகாரியாக கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலியாக உள்ள 3633 பதவிகளுக்கு குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 1300 விஏஓ பதவிகள் நிரப்பப்பட உள்ளன. செப்டம்பருக்குள் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடும் பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப் படும். வினாத்தாள் பிரிப் பது. பேக்கிங் செய்வது வரை அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

எந்த தேர்வானாலும் 40 நாட்களில் முடிவு வெளியிடப்படும். அடுத்த 15 நாட்களில் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் பணி வழங்கப்படும். காத்திருப்பு பட்டியலில் இருந்து 131 பேருக்கு தற்போது வி.ஓ.ஏ பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 6500 காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார்.