தமிழகத்திலேயே மோசமான சாலை சென்னையில்தான்-தேசிய குற்ற ஆவணப் பதிவகம்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> தமிழகத்திலேயே மோசமான சாலை சென்னையில்தான்-தேசிய குற்ற ஆவணப் பதிவகம்

   (2012-07-05 00:00:00)

சென்னை: தமிழகத்திலேயே மோசமான சாலைகளாக சென்னை மாநகர சாலைகள் திகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறியுள்ளது.

சென்னை மாநகரில் 2011ம் ஆண்டு மொத்தம் 9845 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாம். இரண்டாவது இடத்தை நாட்டின் தலைநகர் டெல்லி பிடித்துள்ளது. அங்கு 6065 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. பெங்களூர் நகரம் 6031 விபத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணப் பதிவகம், 2011ல் நடந்த சாலை விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே சென்னையில்தான் அதிக அளவில்சாலை விப்ததுக்கள் நடப்பதாகவும், சென்னை மாநகர சாலைகள்தான் மோசமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 53 நகரங்களில் சென்னையில்தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவாம். கடந்த 2010ம் ஆண்டு மொத்தம் 5123 விபத்துக்களைத்தான் சென்னை சந்தித்தது. ஆனால் இது 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

இருப்பினும் சாலை விபத்துக்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை சென்னையில் சற்று குறைவாக உள்ளது. சென்னையில் 2011ல் நடந்த சாலை விபத்துக்களில் 1399 பேர் இறந்துள்ளனர். டெல்லியில் இது 1679 பேராக இருந்தது.

சென்னை சாலை விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதேசமயம் அதிகமாக உள்ளது. விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 7898 பேராக இருந்தது. இதில் 6280 பேர் ஆண்கள், 1618 பேர் பெண்கள் ஆவர்.

டூவீலர்களில் சென்று விபத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 341 ஆக இருந்தது. தனியார் லாரிகளால் ஏற்படும் விபத்து 266, கார்களால் விபத்து 159, தனியார் டெம்போக்கள் மற்றும் வேன்களால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 133 ஆக இருந்தது.

அரசு வாகனங்களால் அதாவது பஸ்கள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 112 ஆகும்.

சைக்கிளால் கூட சென்னையில் விபத்து நடந்துள்ளது. அதாவது ஒரே ஒரு விபத்து நடந்துள்ளது. அதேசமயம், பாதசாரிகளால் எந்த விபத்தும் நடந்ததில்லை. அதாவது, நடந்து போனால் நல்லது என்பது இதன் சாராம்சம்.

ராத்திரி 9 மணியிலிருந்து நள்ளிரவுக்குள்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. அதாவது 1626 விபத்துக்கள் இந்த நேரத்தில்தான் நடந்துள்ளன. மாலை 3 மணி முதல் 6 மணி வரை 1614 விபத்துக்கள் நடந்துள்ளன.

தமிழகத்திலேயே மோசமான சாலைகள் இருப்பதும் சென்னையில்தானாம். இதற்கு அடுத்து கோவையில் 1131 விபத்துக்கள் நடந்துள்ளன. மதுரையில் 685 விபத்துக்களும், திருச்சியில் 781 விபத்துக்களும் நடந்துள்ளன.