மெட்ரோ ரயில் பணியால் எல்ஐசி கட்டடத்தில் விரிசல்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> மெட்ரோ ரயில் பணியால் எல்ஐசி கட்டடத்தில் விரிசல்

   (2012-07-19 00:00:00)

சென்னை: சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை தோண்டும் பணியால் அண்ணா சாலையில் உள்ள சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான 14 மாடி எல்ஐசி கட்டடத்தின் 2 மாடிகளில் விரிசல் விட்டுள்ளது. இதனால் கட்டடத்திற்குச் சேதம் வருமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது பாதாள ரயில் பாதை அமைப்பதற்காக அண்ணா சாலையில் அதி நவீன ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கப் பாதைப் போடும் பணி நடந்து வருகிறது.

மிகப் பெரிய ராட்சத எந்திரங்களைக் கொண்டு மண்ணுக்குள் துளை போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அண்ணா சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 14 மாடி எல்ஐசி கட்டடத்தின் 11 மற்றும் 12வது மாடி சுவர்களில் விரிசல் விட்டுள்ளதாம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது.

சுரங்கப் பாதை தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எந்திரங்களால் அதிர்வு ஏற்பட்டு அதனால்தான் விரிசல் விழுந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆனால் சுரங்கப் பாதை தோண்டும் பணியால் எல்ஐசி கட்டடத்திற்கு எந்த ஆபத்தும் வராது என்று மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1959ம் ஆண்டு திறக்கப்பட்ட கட்டடம்தான் எல்ஐசி கட்டடம். சென்னையின் முதல் மிக உயரமான கட்டடம் இதுதான். 14 மாடிகளைக் கொண்ட எல்ஐசி கட்டடம்தான் ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. அண்ணா சாலையின் மிகப் பெரிய அடையாளமாகவும் திகழ்ந்தது என்று கூறலாம்.

அந்தக் காலத்தில் சினிமாப் படங்களில் கூட ஹீரோ 'பட்டணத்திற்கு' வருவதை உணர்த்த எல்ஐசி கட்டடத்தைத்தான் காண்பிப்பார்கள் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது மெட்ரோ ரயில்பணியால் இந்த கட்டடத்திற்கு ஆபத்து என்று வெளியாகியுள்ள செய்தியால் சென்னை மக்கள் பரபரப்படைந்துள்ளனர்.