திமுக ரகசிய திட்டம்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> திமுக ரகசிய திட்டம்

   (2012-07-03 00:00:00)

சென்னை: நாளை திமுக நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் திமுகவினருக்கு தான் கட்சியிலும், வரும் காலத்தில் ஆட்சியிலும் பங்கு அளிக்கப்படும் என திமுக வட்டராத்தில் கூறப்படுகின்றது.

அதிமுக அரசை கண்டித்து நாளை திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த போராட்டத்தில் திமுக முன்னணி தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை விரும்புகின்றது.

தாம்பரத்தில் நடந்த சிறை நிரப்பும் போராட்டம் குறித்த விளக்கக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, இந்த போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அறப்போராட்ட வழியில் கலந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் எத்தனை நாட்கள் சிறையில் அடைத்தாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக யாரும் ஜாமீன் கேட்கக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கட்சியினரைக் கலந்து கொள்ள வைக்க திமுக தலைமை நவீன யுக்தியை கையாண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி திமுக மாவட்ட செயலாளர்களுக்கு திமுக முன்னணி தலைவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. அதில், சிறை சென்றால் அங்கேயே 10 நாட்கள் வரை இருக்கும் நபர்கள், 15 நாட்கள் வரை இருக்கும் நபர்கள், 30 நாட்கள் வரை இருக்கும் நபர்கள், மேலும் 30 நாட்களுக்கு மேல் இருக்க தயராக உள்ள நபர்கள் என வரிசைப்படுத்தி பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாம்.

திமுகவினர் பலரும் பெரிய அளவில் தொழில் செய்து வருவதால் கைதாகி சிறை செல்லும் பட்சத்தில் அரசு 15 நாட்களுக்கு ரிமாணடில் வைத்தால் தொழிலை யார் கவனிப்பது என கலக்கத்தில் உள்ளனர்.

இது குறி்த்து திமுக நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறுகையில்,

திமுகவின் தன்மானத்தை காப்பாற்றும் வகையில் சிறை செல்ல உள்ள நபர்களையே திமுக விரும்புகின்றது. சிறையில் நீண்ட நாட்கள் இருக்கும் நபர்களை கவுரப்படுத்தும்விதமாக சிறை சென்ற செம்மல் போன்ற சான்றிதழ் கொடுக்க உள்ளனர். இந்த சான்றிதழ் இருந்தால் தான் வரும் காலத்தில் கட்சி பதவி, எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது என்றார்.

ஆனால் திமுக தொண்டர்கள் மத்தியிலோ கருத்து வேறு விதமாக உள்ளது. ஆட்சியின்போது எங்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை. பதவியும், பணத்தையும் சம்பாதித்தவர்கள் வேண்டுமானால் சிறைக்கு செல்லட்டும். எந்த தவறும் செய்யாத நாங்கள் ஏன் சிறைக்கு செல்ல வேண்டும் என பலர் கூறி வருவதால் குழப்ப நிலை நீடித்து வருகின்றது. திமுகவின் இந்த ரகசிய அறிவிப்பு கடைக்கோடி தொண்டனையும் கலங்கடித்துள்ளது