8 ஆண்டுகளுக்குப் பிறகு சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> 8 ஆண்டுகளுக்குப் பிறகு சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு

   (2012-07-07 00:00:00)

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அக் கல்லூரிகளிடமிருந்து வரவு, செலவு கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டன. இதன்படி பெறப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தும் இப்போது கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.32,500-லிருந்து ரூ. 40,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கான கட்டணம் ரூ.40,000 -லிருந்து ரூ.45,000-மாகவும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் ரூ.62,500-லிருந்து ரூ.70 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளுக்கான இந்தக் கட்டண நிர்ணயம் 2012-13 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றார் அவர்.