தூக்கில் தொங்கிய கணவன் மனைவி-அனாதையான 3 குழந்தைகள்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> தூக்கில் தொங்கிய கணவன் மனைவி-அனாதையான 3 குழந்தைகள்

   (2012-07-05 00:00:00)

மதுரை: மதுரையில் குடும்பத் தகராறில் கணவனும், மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அவர்களது மூன்று குழந்தைகள் அனாதையாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குத் தெரு கிராமம் சுப்பராமன் தெருவைச் சேர்ந்த கோடாங்கி அழகனின் மகன் கணபதி(28). கொத்தனார். அவரது மனைவி பாரதி(22). அவர்களுக்கு மூன்றரை மற்றும் ஒன்றரை வயதில் கங்கா தேவி, மாலதி என்ற மகள்களும் 8 மாதக் குழந்தையான பிரித்விராஜன் என்ற மகனும் உள்ளனர்.

கணபதி, பாரதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் குடும்ப விஷயமாக கணவனும், மனைவியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பா, அம்மா சண்டை போடுவதைப் பார்த்த குழந்தைகள் பயந்து போயுள்ளனர். தகராறு முற்றி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கணபதி லுங்கியாலும், பாரதி சேலையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இத்தனை நேரம் சண்டை போட்டுக் கொண்டி்ருந்த அப்பா, அம்மா திடீரென்று விட்டத்தில் தொங்குவதைப் பார்த்த பிள்ளைகள் நடந்தது என்னவென்று தெரியாமல் அலறத் தொடங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது கணவனும், மனைவியும் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.