கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு-சகாயம் ஐ.ஏ.எஸ்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> கிரானைட் கொள்ளையால் அரசுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு-சகாயம் ஐ.ஏ.எஸ்

   (2012-07-31 00:00:00)

மதுரை : சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் தமிழக அரசுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தவரும், தற்போது கோ- ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் இருக்கும் சகாயம் அரசுக்கு அளித்த ஆய்வறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

16000 கோடி ரூபாய் இழப்பு

மதுரை மாவட்டம் மேலுரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துவருவதாக தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. அப்போதைய ஆட்சியராக இருந்த சகாயத்திடம் இது தொடர்பான புகார் ஒன்றினை நாளிதழின் நிருபர் அளித்தார்.இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட சகாயம், ஆய்வு தொடர்பான அறிக்கை முடிவினை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து விதிகளை மீறி கிரானைட் வெட்டி எடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சகாயம் குறிப்பிட்டுள்ளார். அரசு புறம்போக்கு நிலம், கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் ஆகிய நீர் ஆதாரங்கள் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் கிரானைட்கள் மூலம் ரூ.16000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை கடந்த மே மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.இது குறித்து கருத்து கூறியுள்ள மதுரை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அழிந்து வரும் நீராதாரங்கள்

இதனிடையே மேலூர் வட்டாரத்தில் இயங்கும் கிரானைட் குவாரிகள் பஞ்சாயத்து இடங்களிலேயே இயங்கினாலும் இங்கே இருக்கும் பல குவாரிகள் பஞ்சாயத்துக்கு வரி கட்டுவதே இல்லை. இதனால் மாதாமாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனக் கால்வாய்களில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நாவினிக்கும்பட்டியில் இருந்து கீழையூர் வரை பெரியார் பாசன துணைக் கால்வாய்களை ஒட்டியே குவாரி கள் இருக்கின்றன. இந்த குவாரிகளில், விதிமுறை மீறி அதலபாதாளம் வரை தோண்டப்படுவதால் கால்வாய் தண்ணீர், குவாரிகளுக்குள் ஊற்றெடுத்து விரயமாகிறது. தெற்குத் தெரு ஏரியாவில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான மூன்று பாசனக் கால்வாய்களை மூடிவிட்டுத்தான் கிரானைட் கம்பெனி அமைத்து உள்ளார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலூர் பகுதிகளில் ஆறு, கண் மாய்களை அழித்துவிட்டார்கள். சில இடங்களில் குளங்களையே குவாரிகளாக்கி விட்டார்கள். இப்படி நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட தால், பாசனம் செய்ய முடியாமல் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி விட்டது. பாசனம் படுத்துவிட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வளைத்துவிட்டனர் கிரானைட் குவாரி அதிபர்கள்.