சென்னையில் மின்வெட்டு 30 நிமிடமாக குறைகிறது

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> சென்னையில் மின்வெட்டு 30 நிமிடமாக குறைகிறது

   (2012-07-04 00:00:00)

சென்னை:தென் மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வீசுகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி சீராக உள்ளது. கடந்த மாதம் காற்றாலை மூலம் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. தற்போது 15 நாட்களாக காற்றாலைகள் மூலம் தினமும் 3730 மெகாவாட் முதல் 3,830 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி ஆகி இருக்கிறது.

அடுத்த 2 மாதங்களுக்கு தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே சராசரியாக 3725 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தினசரி மின் தேவை 11 ஆயிரத்து 283 மில்லியன் யூனிட் ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 8 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இப்போது காற்றாலை மின்சாரம் தொடர்ந்து 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. சில புதிய மின் உற்பத்தி நிலையங்களும் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க உள்ளன. விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்க உள்ளது.

வட சென்னை மின் நிலையத்தின் 2-வது பிரிவு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இருக்கிறது. மேட்டூர் அனல் மின் நிலையமும் விரைவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்ளது. தற்போது சென்னையில் 1 மணி நேர மின்வெட்டும், மற்ற இடங்களில் 2 மணி நேர மின் வெட்டும் உள்ளது.

காற்றாலை மின்சாரம் சீராக அதிகரித்துள்ளதால், சென்னையில் மின் வெட்டு நேரம் 30 நிமிடமாக குறைக்கவும், மற்ற மாவட்டங்களில் 1 மணி நேரமாகவும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் மொத்த மின் தேவை குறித்து கணக்கிடும் பணி நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.