உயரப்போகும் இணைய சேவை கட்டணம்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> உயரப்போகும் இணைய சேவை கட்டணம்

   (2012-07-07 00:00:00)

இணைய தள பயன்பாடு வேகமாக பரவிவரும் நிலையில், அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளது.

வருடாந்திர உரிமத் தொகை என்ற புதிய கட்டணத்தை விதிக்க அத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, இணையதள சேவை தரும் நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு அவர்களது மொத்த வருவாயில் 4 சதவிகித தொகையை, வருடாந்திர உரிமக் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு, இத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் அவை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிய வருகிறது.
இந்த புதியமுறை கடந்த 1ம் தேதி முதலே அமலுக்கு வந்தது என்றும் கூறப்படுகிறது. இதேபோல தொலைபேசி சேவையுடன் கூடிய இணைய சேவை வழங்குபவர்களுக்கான வருடாந்திர உரிமத் தொகை, தற்போதுள்ள 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, இந்த இரு தரப்பும், ஒரே சீராக தங்களது மொத்த வருவாயில் 8 சதவீதத்தை உரிம கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, இணையதள பயன்பாட்டு கட்டணங்களை அதிகரிக்க இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத் தொடர்பு துறையின், இந்த முடிவால், தங்கள் லாப வரம்பு குறையும் என்பதால், இம்முறையை எதிர்த்து தொலைத்தொடர்பு விவகார தீர்ப்பாயத்தை அணுகவும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.