ஆயுதத்துடன் சரண் அடைந்தால் மாவோயிஸ்டுகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு-மத்திய அரசு அறிவிப்பு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> ஆயுதத்துடன் சரண் அடைந்தால் மாவோயிஸ்டுகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு-மத்திய அரசு அறிவிப்பு

   (2012-07-14 00:00:00)

புதுடெல்லி:இந்தியாவில் 11 மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் உள்ளது. மாவோயிஸ்டு இயக்கத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் சேருவதை அறிந்த மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வேலை கொடுக்க தொடங்கியுள்ளது.

இதற்கிடையே மாவோயிஸ்டுகளை மனம் மாற்றும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு பரிசுத்தொகைகள், உதவித் தொகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போது மத்திய அரசு ரூ.1 1/2 லட்சமாக உயர்த்தி உள்ளது. அதாவது பரிசுத்தொகை 15 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீன வகை ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்களுடன் சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு உதவித்தொகைகளும் வழங்கப்பட உள்ளன.

சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு பரிசுத் தொகை தவிர மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். இந்த உதவித் தொகை 36 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

குறிப்பிட்ட மாதத்துக்குப் பிறகு மாவோயிஸ்டுகள் மீண்டும் நாசவேலை பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி திட்டமும் தொடங்கப்பட உள்ளது. அந்த வைப்புத் தொகையை 3 ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்தகைய திட்டங்கள் மூலம் மாவோயிஸ்டு இயக்கத்தின் செயல்பாடுகளை குறைக்க முடியும் என்று உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலாளர் அஜய் சத்தா கூறினார்.