பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்-ரிசர்வ் வங்கி
பிளாஸ்டிக்கினாலான ரூபாய் நோட்டுக்களை விரைவில் சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தப்போவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் போன்ற 4 அல்லது 5 நகரங்களில் பிளாஸ்டிக் பணம் சோதனை ரீதியில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஹச்.ஆர்.கான் தெரிவித்துள்ளார்.
5 நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் வாயிலாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கான் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் ரூபாய்கள் புழக்கத்தில் கொண்டு வருவதன் மூலம் கள்ளநோட்டு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அதிக செலவாகும் என்பதால் இதை வெளியாட்கள் உருவாக்க முடியாது என அரசு நம்புகிறது.
மேலும் ரூபாய் நோட்டுக்கள் கிழிந்து, அழுக்கடைந்த நிலையை அடைவதும் தடுக்கப்படும். சாதாரண ரூபாய் நோட்டுக்களின சராசரி ஆயுட்காலம் ஓராண்டாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் நோட்டுக்கள் 5 ஆண்டு தாக்குப்பிடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுக்களை பயன்படுத்துவதால் சுறறுச்சூழல் ரீதியில் பாதிப்பு இருக்குமா என்றும் இந்த சோதனை முயற்சியில் ஆராயப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் பணம் நடைமுறையில் உள்ளது.