பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாசையே பயன்படுத்தலாம்-தமிழக அரசு

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாசையே பயன்படுத்தலாம்-தமிழக அரசு

   (2012-07-10 00:00:00)

நெல்லை: இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு முறையில் வழங்க காலதாமதமாவதால் மாணவ, மாணவிகள் புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என வாய்மொழியாக அரசு உத்தரவி்ட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்ட குளறுபடிகளால் ஏற்பட்ட பிரச்சனையால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி வரும் மாணவ, மாணவிகள் குறித்து பள்ளிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு முறையில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பஸ் பாஸ் வரும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் பெற்ற மாணவர்கள் அதனையே பயன்படுத்திக் கொள்ள அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு தெரிவி்க்கப்பட்டுள்ளது.