என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா-கொதிக்கும் ஆசிரியைகள்!

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா-கொதிக்கும் ஆசிரியைகள்!

   (2012-07-11 00:00:00)

சென்னை: மாணவர்களைத் தூண்டும் வகையில் டிரஸ் போட்டு வரக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது தமிழக பள்ளி ஆசிரியைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக கல்வித்துறை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆசிரியைகள், நாகரீகமான முறையில் நமது கலாச்சாரத்திற்கு உட்பட்ட வகையில் டிரஸ் அணிய வேண்டும். வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு முன்மாதிரியாக ஆசிரியைகள் முதலில் நல்ல முறையில் ஆடை அணிந்து வர வேண்டும். குறிப்பாக மாணவர்களிடையே தவறான எண்ணத்தைத் தூண்டும் வகையிலான உடைகள் அணிவதை ஆசிரியைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இதுகுறித்து சுஜாதா என்ற மூத்த ஆசிரியை கூறுகையில், ஒரு ஆசிரியைக்கு தான் என்ன டிரஸ் போட்டுச் செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்று கூடவா தெரியாது. இதில் அரசு ஏன் தலையிடுகிறது என்று புரியவில்லை. அதற்கான அவசியமே இல்லை.

9 வது முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே ஆசிரியைகள் போட்டு வரும் டிரஸ் குறித்த ஆர்வம் இருக்கும்தான். அதை யாரும் மறுக்கவில்லை. தங்களுக்குள் கிசுகிசுக்கத்தான் செய்வார்கள். கமெண்ட் அடிப்பார்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதை எப்படி சமாளிக்க வேண்டுமோ அப்படிச் சமாளிக்க ஆசிரியைகளுக்குத் தெரியும். ஆசிரியைகள் என்ன மாதிரியான டிரஸ் போட்டு வந்தாலும் இதுபோன்ற கமெண்டுகளைத் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது. அந்த மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள ஆசிரியைகளுக்குத் தெரியும்.

ஆசிரியைகளின் நடத்தை, பண்பு, பழகும் தன்மை, பிரச்சினைகளை அணுகும் திறமை, பரிவு காட்டுவது, நல்ல போதனை ஆகியவற்றை வைத்துத்தான் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியுமே தவிர வெறும் உடைக் கட்டுப்பாட்டால் அதை சாதிக்க முடியாது.

அதை விடுத்து இப்படி டிரஸ் போடக் கூடாது, அப்படி டிரஸ் போடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தால் நாளை இப்பணிக்கு வர பலரும் தயங்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றார்.

உஷா என்ற ஆசிரியை கூறுகையில், ஆசிரியைகளின் பிளவுஸ் முதல் கொண்டு எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது அநாகரீகமாக உள்ளது. மேலும் மாணவர்கள் எல்லோருமே ஆசிரியைகளின் உடைகளைப் பார்த்து கெட்டுப் போவதாக கூறுவது அதை விட மோசமானது, நியாயமற்றது. கேலிக்கூத்தாக உள்ளது. இதுவும் கூட ஒரு வகையில் ஆணாதிக்க வெளிப்பாடுதான்.

ஒரு மாணவன் தனது ஆசிரியை என்ன டிரஸ் போட்டுள்ளார் என்பதைப் பார்த்து மதிப்பதில்லை. மாறாக, அந்த ஆசிரியை எப்படி நடந்து கொள்கிறார், எப்படி பாடம் நடத்துகிறார், தனது பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு சொல்கிறார் என்பதைப் பார்த்துதான் மதிக்கிறான் என்றார்.

இருப்பினும் தலைமை ஆசிரியை வத்சலா பாஸ்கரன் இதிலிருந்து முரண்படுகிறார். அரசின் கட்டுப்பாட்டை அவர் வரவேற்கிறார். அவர் கூறுகையில், ஒரு ஆசிரியை நல்ல முறையில் டிரஸ் போட்டு வர வேண்டியது அவசியமதான். சேலையை நல்ல முறையில் கட்டி வாருங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும். பள்ளிகளில் ஆசிரியைகளை சேலையில் வரச் சொல்வதே, மாணவர்கள் மத்தியில் அவர்கள் கண்ணியமாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் இன்று பல இளம் ஆசிரியைகள், கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வேலைக்கு வந்து விடுகிறார்கள். பலருக்கு சேலையை சரியாக கட்டிக் கொண்டு கூட வரத் தெரியவில்லை. இது உண்மை. எனவேதான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அரசு சொல்ல நேரிட்டுள்ளது என்றார்.

இந்த சர்ச்சை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியைகளை மட்டம் தட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அல்ல இது. மாறாக கல்வி நிலையங்களில் எந்தவிதமான கவனச் சிதறல்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் பிறப்பிக்கப்பட்ட அறிவுரைதான். எந்த வகையிலும் ஒழுங்கீனம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சில ஆசிரியைகள் உடை அணிவதில் தவறு இருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்தே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்கின்றனர்.