சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலை ஓட்ட முயன்ற வாலிபர்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலை ஓட்ட முயன்ற வாலிபர்

   (2012-07-09 00:00:00)

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு செல்லவிருந்த மின்சார ரயிலை வாலிபர் ஒருவர் இயக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு செல்ல மின்சார ரயில் ஒன்று தயாராக நின்றது. அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் யாரும் எதிர்பாராவிதமாக என்ஜினில் ஏறி ரயிலை இயக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில் டிரைவர் அந்த வாலிபரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் வந்து அந்த வாலிபரை பிடித்துச் சென்று சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சையைச் சேர்ந்த காதர் மொய்தீன் மகன் தமீம் அன்சாரி(25) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட அவர் அரக்கோணத்திலுள்ள மாமா வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமீம் அன்சாரியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமீம் அன்சாரி தனது மாமா வீட்டில் இருந்து தப்பித்து வந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் டிரைவர் உரிய நேரத்தில் அன்சாரியைப் பார்த்து அங்கிருந்து வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் ரயிலை கடத்திச் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அந்த நபர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.